Published : 20 Jul 2025 08:38 AM
Last Updated : 20 Jul 2025 08:38 AM
சென்னை: வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட திமுக அரசு முயற்சி செய்வதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எம்.பி.க்களை கூட்டி 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.
கடந்த மே மாதம் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். கூவம் ஆற்றை சுத்தம் செய்வதாகக் கூறி, மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் முதல் திமுக தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டத்தை காட்டியே பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டனர்.
இப்போது வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட முடியுமா என அலைகின்றனர். ஒவ்வொரு பிரச்சினையிலும் மத்திய அரசிடம் கேட்டுவிட்டோம் செய்யவில்லை என பழி போட்டு தப்பித்துக் கொள்ளலாமென முதல்வர் எண்ணுகிறார். தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த நிதி தரவில்லை என கூறுங்கள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முறை கேட்டுவிட்டார். ஆனால், இவர்களிடம் பதில் இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது.
இந்த நிதியின் மூலம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன, பல ஆண்டுகளுக்கு பிறகு பைசா அளவில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிப்பதாக நீலிக் கண்ணீர்வடிக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மூன்று மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
தற்போது சிறு கடைகளைக் கூட விட்டுவைக்காமல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. சொந்த மாநில மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் முதல்வருக்கு மனசாட்சி இருந்தால் ரயில் கட்டணத்தை பற்றி பேசுவாரா, திமுக குடும்பம் மட்டுமே குதூகலமாக வாழும் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தமிழக மக்கள் எப்போதோ தயாராகி விட்டார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT