Published : 20 Jul 2025 08:35 AM
Last Updated : 20 Jul 2025 08:35 AM
சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றமே நடக்கவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளக புகார் குழுக்களையே அமைக்காமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதா என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் வலைதள பதிவு: தமிழகத்தில் 180 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்கும் உள்ளக புகார் குழுக்கள் இல்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தங்கள் கல்லூரியில் இந்த குழு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்கவே 113 அரசு கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன.
தவிர, புகார் குழுக்கள் அமைக்கப்பட்ட தஞ்சாவூர், ராசிபுரம், நாமக்கல் அரசு கல்லூரிகளில் தலா ஒரே ஒரு பாலியல் புகார் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவும் ‘சமாதானமாக’ முடித்து வைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகளின்படி, 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொண்ட அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயம். ஆனால், அரசு கல்லூரிகளிலேயே புகார் குழு அமைக்கப்படாமல் உள்ளது. இதன்மூலம், திமுகஅரசுக்கு சட்டம் மீதும், சட்டம் - ஒழுங்கை பேணுவதிலும் அக்கறை இல்லாதது தெளிவாகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு திமுக ஆதரவாளரால் நிகழ்ந்த வன்கொடுமையை கண்டு தமிழகமே கொதித்தெழுந்த பிறகும், கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய அடிப்படை கட்டமைப்பைகூட திமுக அரசு செய்ய தவறியது மிக கொடுமையானது. பாலியல் புகார்களை தெரிவிக்கும் உள்ளக புகார் குழுக்களை அனைத்து அரசு கல்லூரிகளிலும் திமுக அரசு உடனே அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT