Published : 20 Jul 2025 07:45 AM
Last Updated : 20 Jul 2025 07:45 AM
மயிலாடுதுறை: அரசு வாகனம் பறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகப் பணியாற்றி வந்தவர் சுந்தரேசன். இவர், தான் நேர்மையாகப் பணியாற்றியதால், தனது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். மேலும், எஸ்.பி.உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் புகார் தெரிவித்திருந்தார். காவல் துறை நடத்தை விதிகளை மீறியதால், இவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு மத்தியமண்டல ஐ.ஜி.க்கு, தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைகூறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாலும், பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாலும் அவரை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முன் அனுமதியின்றி மயிலாடுதுறையை விட்டு வெளியூர்களுக்கு செல்லக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மயிலாடுதுறையில் டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நான் உயர் அதிகாரிகள் மீது புகார் கூறியதால், தற்போது என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நான் தவறு செய்திருந்தால், அப்போதே என்னை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால், அதற்காக அப்போது ஏன் என்னை பணியிடை நீக்கம் செய்யவில்லை?
எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையால் எனது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க செல்வதற்கு கூட எனக்கு அனுமதி வழங்கவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வரும் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT