Published : 19 Jul 2025 07:48 PM
Last Updated : 19 Jul 2025 07:48 PM

“என்னை விசாரிக்காமல் சஸ்பெண்ட் செய்ய எப்படி பரிந்துரைக்க முடியும்?” - டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை: “என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்?” என்று மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் உயர் அதிகாரிகள் மீது புகார் கூறியதால், தற்போது என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நான் தவறு செய்து இருந்தால், அப்போதே என்னை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றமாக உள்ளது.

என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால், அதற்காக தற்போது வரை ஏன் என்னை பணியிடை நீக்கம் செய்யவில்லை. என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்? எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை பார்த்து எனது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்கச் செல்வதற்காக மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி கேட்டும் இதுவரை பதில் இல்லை.

நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சிலரின் சுயநலத்தால்தான் என்னைப் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் என்று எனக்கு தெரியும். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடலாம்.

டிஜிபி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால், அவர் தற்போது வரை இந்த விவகாரத்தை விசாரிக்கவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வரும் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும்” என்றார்.

நடந்தது என்ன? - மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் தனது அரசு வாகனத்தை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல் துறை தரப்பில் கேட்டதாகவும், உரிய ஆணை இல்லாமல் வழங்க முடியாது என்று கூறியதால், வெளியூர் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவிட்டு, வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், அலுவலகத்துக்கு நடந்தே சென்றதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிஎஸ்பி, தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை நடத்தி, அவரை பணியிடை நீக்கம் செய்ய மத்திய மண்டல ஐ.ஜிக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x