Published : 19 Jul 2025 04:38 PM
Last Updated : 19 Jul 2025 04:38 PM

‘வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுக’ - சென்னையில் 3,000+ பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டு பேரணி!

சென்னை: பணிநிரந்தர கோரிக்கைக்காக 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர். இதில், 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு பங்கேற்றனர்.

அரசுப் பள்​ளி​களில் 12,000-க்கும் மேற்​பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்​கள் கடந்த 2012-ம் ஆண்​டு ​முதல் பணி​யாற்றி வரு​கின்​றனர். வாரத்​தில் 3 நாட்​கள் பணிபுரி​யும் அவர்​களுக்கு தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.12,500 வழங்​கப்​படு​கிறது. அவர்​கள் தங்​களை பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

திமுக ஆட்​சிக்கு வந்​தால் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வர் எனத் தேர்​தல் வாக்​குறுதி (வாக்குறுதி எண் 181) அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகை​யில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்​பேற்​றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் தங்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி வரு​கின்​றனர். தங்​கள் கோரிக்​கையை வலி​யுறுத்தி பல்​வேறு வடிவங்​களில் அடிக்​கடி போராட்​டத்​தி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட தங்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், பகு​திநேர சிறப்பு ஆசிரியர் சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு சார்​பில் கால​வரையற்ற போராட்​டம் நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்​கியது. இப்​போ​ராட்​டம் 12-வது நாளாக இன்றும் நீடித்​தது.

தினமும்வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து கோரிக்கைகளை வலியுறுத்து வரும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்​கள், போராட்டத்தின் 12-வது நாளான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை சித்ரா தியேட்டர் முதல் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடத்தினர். 3,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்ற இந்தப் பேரணி நண்பகல் 12 மணியளவில் முடிந்த நிலையில், அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அப்போது ஆசிரியர்கள் பலரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களை கைது செய்து கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் போலீஸார் இறக்கிவிட்டனர். அப்போது ‘இந்தப் போராட்டத்தை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்’ என்று போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

எனினும், கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 29 பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x