Last Updated : 19 Jul, 2025 11:11 AM

 

Published : 19 Jul 2025 11:11 AM
Last Updated : 19 Jul 2025 11:11 AM

‘எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதியவர்’ - மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி

சென்னை: “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.” என்று மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “எங்கள் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டப்பட்டது. தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன்.

நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார்.

பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x