Published : 19 Jul 2025 05:22 AM
Last Updated : 19 Jul 2025 05:22 AM
மயிலாடுதுறை: காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகனம் பறிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், காவல் துறை நடத்தை விதிகளை மீறியதாக டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்யுமாறு, மத்திய மண்டல ஐ.ஜி.க்கு, டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை பறித்துக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இதற்கிடையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிஎஸ்பி, தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இச்சம்பவத்துக்கு பாமக தலைவர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், உரிய அனுமதிஇன்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது, காவல் துறையினருக்கான நடத்தை விதிகளை தொடர்ந்து மீறியிருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.க்கு டிஐஜி அறிக்கை அனுப்பியிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘டிஐஜி தாக்கல் செய்துள்ள அறிக்கை, டிஜிபிக்கும், உள்துறைச் செயலருக்கும் அனுப்பி வைக்கப்படும். டிஎஸ்பி மீதான சஸ்பெண்ட் குறித்து உள்துறைச் செயலர் முடிவெடுப்பார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT