Published : 18 Jul 2025 06:38 PM
Last Updated : 18 Jul 2025 06:38 PM
சிவகங்கை: நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரும், டிட்டோ ஜேக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினருமான ச.மயில் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாங்கள் வைத்துள்ள 10 அம்சக் கோரிக்கைகளும் புதிதாக வைக்கப்பட்டவை அல்ல. எங்களிடமிருந்து பல உரிமைகளை ஒவ்வொன்றாக திமுக அரசு பறித்து கொண்டே செல்கிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் வெளியிட்ட அரசாணைகளுக்கு புறம்பாக, பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் அதிகாரிகள் செயல்முறை ஆணைகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சாதாரண எழுத்தர் கூட ஆசிரியர்கள் பெற்று வந்த ஊதியத்திற்கு தணிக்கை தடை விதிக்கிறார்.
25 ஆண்டுகளாக பெற்று வந்த ஊதியத்தை திடீரென தவறு என்று கூறி, ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை திரும்பச் செலுத்த சொல்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
தற்போது திமுக அரசு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த திட்டத்தில் மனு கொடுத்தால் 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றனர். நாங்கள் நான்கரை ஆண்டுகளாக அரசிடம் மனு கொடுத்து கொண்டிருக்கிறோம். எட்டு முறை முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறோம். அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பலமுறை கூறி இருக்கிறோம். ஆனால் இதுவரை எங்களுடைய கோரிக்கைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு கொடுத்தால் நடக்குமோ? என்னமோ? மேலும் நான்கரை ஆண்டுகளாக கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது. ‘ஓரணியில் தமிழ்நாடு; என்று முதல்வர் சொல்வது போல, எங்களுடைய பாதிப்புகளை கேட்பதற்காக அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரண்டு போராடுகிறோம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. நாங்கள் ஓய்வூதியம் கேட்டால், முன்னாள் எம்எல்ஏக்களுக்கு 2 முறை ஓய்வூதியத்தை உயர்த்திவிட்டனர். ஆசிரியர்கள் ஓய்வுக்கு பின்னர் பிச்சை தான் எடுக்க வேண்டும். சபாநாயகர் அப்பாவு, முன்னாள் எம்எல்ஏக்கள் சட்டை பட்டன் கூட இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்கிறார். சட்டையே இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு என்ன கோரிக்கை வைப்பது. எங்களது கோரிக்கைகளை அலட்சியம் செய்தால் ஆக.8-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடுவோம்" இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT