Last Updated : 18 Jul, 2025 01:04 PM

 

Published : 18 Jul 2025 01:04 PM
Last Updated : 18 Jul 2025 01:04 PM

பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? - முத்தரசன் கண்டனம்

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அவைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்துக் கூறி, நடப்பு “இந்துத்துவா” அரசியல் கருத்தியலுக்கு ஆதரவு திரட்டவும் பெரும்பான்மை மதவெறியூட்டும் வகையிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இது, பள்ளி வயது குழந்தைகளின் மனதில் ஆரம்ப நிலையில் மதவெறி விஷ விதைகளை விதைக்கும் வன்மம் நிறைந்த செயலாகும்.

கடந்த 13 ஆம் நூற்றாண்டிலும், அதற்கு சற்று முன்பும், பின்புமான காலகட்டத்தில் நடந்து போன சம்பவங்களாகும். சாதனைகளும், வேதனைகளும் நிறைந்த கடந்த கால நிகழ்வுகளை நிகழ்காலத்திலும் சரி, எதிர் காலத்திலும் சரி திருத்தியமைக்க முயல்வது வரலாற்றுப் புரட்டாகவே அமையும் என்பதை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் கருத்தில் கொள்ளாமல், நிகழ்கால அரசியல் தேவைக்கு வளைந்து கொடுத்திருப்பது ஏற்க தக்கதல்ல.

சில வருடங்களுக்கு முன்பு கல்வி ஆராய்ச்சிக் குழுவில் வலுசாரியினர் நியமிக்கப்பட்டதன் விளைவுகள் வெளிப்பட்டுள்ளன. போர்க்களங்களிலும், யுத்த காலங்களிலும் பேரழிவுகள் ஏற்படுவது அதன் இயல்பான விளைவுகளாகும். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டீஷ் பேரரசும், இன்றைய இந்தியாவின் பல பகுதிகளில், செல்வ வளங்களை வகை, தொகையின்றி கொள்ளை அடித்துச் சென்றதை 18, 19 ஆம் நூற்றாண்டு வரலாறு பதிவு செய்துள்ளது.

நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைகளையும், காலனி ஆதிக்க அடிமைத்தனத்தையும் வென்று, விடுதலை பெற்று, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கி, மாநிலங்கள் இணைந்து ஒன்றியமாக அமைந்துள்ள நாட்டின், ஆட்சி நிர்வாகம் கூட்டாட்சி நெறிமுறைகளையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இங்கு அதிகார பரவலாக்கம், பயில்வோர் உணர்வுகளில் நிலைத்த சமாதானம், நீடித்த அமைதியும் நிலவ வேண்டும் என்ற சிந்தனையை வளர்ப்பதும், வலுப்படுத்துவதுமான பாடங்கள் தான் அதிகம் இன்றியமையாத் தேவையாகும்.

இதற்கு மாறாக, மதவெறி நஞ்சு விதைகளை பிஞ்சு மனங்களில் விதைத்து, சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அவைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x