Last Updated : 18 Jul, 2025 11:51 AM

2  

Published : 18 Jul 2025 11:51 AM
Last Updated : 18 Jul 2025 11:51 AM

தூய்மை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம்

கோவை: ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ தரவரிசைப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் 28-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் கோவை மாநகராட்சி பிடித்துள்ளது.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை பாரதம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, மத்திய அரசின் சார்பில் ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ 2024-25-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்புப் பணிகள் குறித்த சர்வே நாடு முழுவதும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் முடிவுகள் இன்று (ஜூலை 17) வெளியிடப்பட்டன. சுவெச் சர்வெக்‌ஷான் 2024-25 தேசிய தூய்மை தரவரிசைப் பட்டியலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்களுக்கான பிரிவில், கோவை மாநகராட்சி தேசிய அளவில் 28-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 12,500 மதிப்பெண் புள்ளிகளில் கோவை மாநகராட்சி 8,347 புள்ளிகள் பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து 6,822 புள்ளிகள் பெற்று சென்னை தேசிய அளவில் 38-வது இடத்தையும், தமிழகத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மதுரை மாநகராட்சி 4,823 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் 40-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது. தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றிருப்பது இது 2-வது முறையாகும். கடந்த 2020-ம் ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, “கடந்தாண்டை விட நடப்பாண்டு தேசிய அளவில் கோவை மாநகராட்சி நல்ல நிலையை பெறுவதற்கு வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல், தரம் பிரித்து குப்பை சேகரித்தல், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருத்தல், குடியிருப்புப் பகுதிகளின் தூய்மைத் தன்மை, மார்க்கெட் பகுதிகளில் தூய்மைத் தன்மை, மாநகராட்சிக்குட்பட்ட குளங்களின் தூய்மைத் தன்மை, பொதுமக்களிடம் தரம் பிரித்து குப்பை ஒப்படைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல தர நிலைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x