Published : 18 Jul 2025 05:37 AM
Last Updated : 18 Jul 2025 05:37 AM
சென்னை: தொழில்நுட்ப மேம்பாட்டு பணி காரணமாக, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் ஆக.3, 4 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று சென்னை நகர அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருள் (ஏபிடி 2.0) ஆக.5-ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கைப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இந்த டிஜிட்டல் தொழில் நுட்ப சேவையை சுமூகமாகவும், பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக, ஆக.3, 4 ஆகிய நாட்கள் “பரிவர்த்தனை இல்லா நாட்களாக” கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு நாட்களும் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது.
இந்த தற்காலிக சேவை நிறுத்தம், புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த பரிவர்த்தனை இல்லா நாட்களை கணக்கில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று அஞ்சல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT