Published : 18 Jul 2025 02:23 AM
Last Updated : 18 Jul 2025 02:23 AM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, முதலில் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் விவரம்:
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு உருவாக்கம், பராமரிப்பு பணிகள், குறிப்பாக, குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவு, தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவையில் அறிவித்த பணிகளை நிர்ணயித்த காலத்துக்குள் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளான மெட்ரோ ரயில், புதிய குடிநீர் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிகளில் 3,199 பணிகள், நகராட்சிகளில் 4,972 பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் தொடங்கி, வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும். அதேபோல, இறுதி கட்டத்தில் இருக்கும் பணிகள், பாதி முடிவுற்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க, மின்வாரியம், குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.
பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து, தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாக துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT