Published : 17 Jul 2025 08:34 PM
Last Updated : 17 Jul 2025 08:34 PM
நெல்லை / திருச்சி: “காமராஜர் குறித்த பேச்சை திமுக எம்.பி திருச்சி சிவா திரும்பப் பெற்று, தார்மிக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நெல்லை எம்.பி.ராபர்ட் புரூஸ் வலியுறுத்தினார்.
பாளையங்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ் கூறும்போது, “காமராஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி.யின் பேச்சு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும். திருச்சி சிவா தனது பேச்சை திரும்ப பெறுவதுடன் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது கருத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக மாநில தலைமை முடிவு செய்யும்” என்றார்.
அதேவேளையில், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறும்போது, “திருச்சி சிவாவை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும். திருச்சி சிவா மன்னிப்பு கேட்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் கைது: இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில், அக்கட்சியினர் இன்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் இருந்து முழக்கங்கள் எழுப்பியபடி, கன்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள திருச்சி சிவா எம்.பி. வீட்டை முற்றுகையிட ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் நீதிமன்றம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தி, 30 பேரை கைது செய்தனர்.
பின்னர் வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, “காமராஜர் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. காமராஜரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா காங்கிரஸ் தொண்டர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும்” என்று எம்.பி ராபர்ட் புரூஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT