Published : 17 Jul 2025 05:37 PM
Last Updated : 17 Jul 2025 05:37 PM

“திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கின்றன” - திருமாவளவன் கருத்து

சென்னை: “வரும் தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுகவை எதிர்ப்பவர்கள் கூட்டணி வடிவத்தையே இன்னும் பெறவில்லை. திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக் கிடக்கின்றன” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: "தமிழுக்காக, தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் பார்வை கொண்டவர் கமல்ஹாசன். தேசிய அளவில் ஜனநாயக சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும்.

மதச்சார்பின்மையை காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து இயங்குகிறார். அந்த வகையில் தான் நாடாளுமன்றத்தில் அவரது அறிமுக பேச்சு அமையும் என நம்புகிறேன். சகோதரர்களாக இருப்போம் என்ற உணர்வை சந்திப்பின்போது வெளிப்படுத்தினார். சென்னையில் ஆக.16-ம் தேதி நடைபெறவுள்ள எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தோம். இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசவில்லை. தேசிய அளவில் இணைந்து செயலாற்றும் தேவை குறித்து கருத்தியல் ரீதியான கருத்துகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டார்.

வரும் தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுகவை எதிர்ப்பவர்கள் கூட்டணி வடிவத்தையே இன்னும் பெறவில்லை. சில கட்சிகள் கூட்டணியில் சேராமல், கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக் கிடக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணி முதல்வரின் கூற்றுப்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் வலுப்பெற்று வருகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முயற்சிக்கிறார். கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர முடியும். அதிமுக ஆட்சியிலும் எங்களுக்கு நெருக்கடி இருந்தது. அதுபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருக்கடிகளை சந்தித்து வலுப்பெற்று, அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். எங்களது நெருக்கடிகளை பொதுவெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அது உண்மையல்ல.

கொடுத்த இடங்களில் போட்டியிடுவீர்களா என்பது யூகமான கேள்வி. விசிகவும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணியை வலுப்பெறச் செய்வதும், வெற்றி பெற வைப்பதும் எங்களின் பொறுப்பு. பேச்சுவார்த்தையில் சுமுகமாக தொகுதி பங்கீடு இருக்கும். இதுவரை நடந்ததை போலவே இந்தத் தேர்தலிலும் இருமுனை போட்டியே இருக்கும். தமிழகத்திலும் தேசிய அளவிலும் மூன்றாவது அணி தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை. மக்களும் இதே மனநிலையில்தான் உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், பொருளாளர் சந்திரசேகரன், செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், விசிக செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் ஆகியோர் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x