Published : 17 Jul 2025 03:07 PM
Last Updated : 17 Jul 2025 03:07 PM
சென்னை: “காமராஜர் குறித்த சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்?. அதைவைத்து அவதூறு வீசுவது யார்?. அந்த அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று. நடிக்காதீங்க ஸ்டாலின்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கல்விக்கண் திறந்த காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?
காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
அவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?
அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க அவர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?
காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி அவர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?
இவரே வெடிகுண்டு வைப்பாராம்..
இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்!
நடிக்காதீங்க ஸ்டாலின்!
அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!
ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது. வாழ்க கர்மவீரரின் புகழ்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >> ‘வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்’ - காமராஜர் சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT