Published : 17 Jul 2025 02:37 PM
Last Updated : 17 Jul 2025 02:37 PM
பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பாமகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே கடும் மோதல் நீடிக்கிறது. அன்புமணி யின் தலைவர் பதவி காலாவதியாகிவிட்டது என தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் கடிதம் அளித்துள்ளார்.
மேலும் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு, பாமகவில் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளார். அவருக்கு பதவி வழங்குவது குறித்து ‘போக போக தெரியும்’ என புதிர் போட்டுள்ளார். இதுமட்டுமின்றி, தைலாபுரத்தில் உள்ள எனது வீட்டில், அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தும் இடத்தில், என்னுடைய நாற்காலியில் ஒட்டு கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற உள்ள மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன் நேற்று விநியோகம் செய்தார். இதில், ராமதாஸ் பெயர் மற்றும் அவரது புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்தது. பாமக நிகழ்வுகளிலும், ராமதாசுடன் இடம்பெற்று வந்த, அன்புமணியின் பெயர் மற்றும் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்திலும் அன்புமணியின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெறவில்லை. இது குறித்து ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறும்போது, “கட்சியை தோளில் சுமந்தவர், சுமந்து வருபவர் ராமதாஸ். அவரது வழிகாட்டுதலின்படி செயல்படவே, பாமகவினர் விரும்புகின்றனர். பாமக என்றால் அவர் மட்டும்தான். அதனால்தான், மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில், அவரது பெயர் மற்றும் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT