Published : 17 Jul 2025 01:40 PM
Last Updated : 17 Jul 2025 01:40 PM
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மாநில நகராட்சி நிர்வவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்தில் நேற்று பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, அவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர காவல் ஆணையர் என்.காமினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தது: மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் இரண்டும் பயன்பாட்டில் இருக்கும். நகரப் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும்.
மேலும், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். நகரப் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த வசதி எல்லாம் இருக்கு...
பேருந்து முனையத்தில் ஏடி.எம் மையம் அமைக்கப்படாததால், 3 வங்கிகளின் நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் தேவையைப் பொறுத்து பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதற்காக 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் பேருந்து முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுல கொஞ்சம் கவனம் செலுத்துங்க...
> இங்கு உணவுப் பொருட்களை சமைக்க அனுமதி இல்லை என்பதால், வெளியே சமைத்து கொண்டு வந்து விற்பதால், உணவுப் பொருட்கள் சூடாக இருப்பதில்லை.
> முதல் தளத்தில் உள்ள ஆண்கள் சிறுநீர் கழிப்பறைக்கு கதவு இல்லாததால், பயன்படுத்துபவர்களுக்கும். அவ்வழியாக செல்பவர்களுக்கும் அசவுகரியமாக உள்ளது.
> திறப்பு விழா கண்டு 2 மாதங்கள் ஆகியும் நகரப் பேருந்து வழித்தடங்கள் குறித்த தகவல் பலகை அமைக்கும் பணி இப்போதுதான் நடைபெறுகிறது.
> பேருந்து முனையத்தின் முதல் நுழைவு வாயில் பகுதியில் புறக்காவல் நிலைய கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை.
> தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை, சேலம், கோவை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் பஞ்சப்பூரில் யு டர்ன் எடுக்கும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
> மன்னார்புரம், டி.விஎஸ் டோல்கேட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியடைகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT