Published : 17 Jul 2025 12:15 PM
Last Updated : 17 Jul 2025 12:15 PM

தவெக கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, தமிழக அரசு பதிவுத்துறையில் சபையின், வர்த்தக முத்திரையாக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியில் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமல்லாமல் சேவைக்கும் பொருந்தும் என்றும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அந்த கட்சியின் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x