Published : 17 Jul 2025 05:45 AM
Last Updated : 17 Jul 2025 05:45 AM
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக, திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஒன்றிணைய வேண்டும். அந்த கட்சிகளை ஒன்று சேர்க்க தமாகா பணியாற்றும் என்று கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா சார்பில், காமராஜர் 123-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் ஜி.கே.வாசன் பேசியதாவது: காமராஜர் வழியில் நேர்மையாக பயணம் செய்யும் கட்சி, எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி தமாகா. நமக்கு ஏற்பட்ட சோதனைகள் வேறு கட்சிக்கு நடந்திருந்தால், அரசியலை விட்டே போயிருக்கும். திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருள் பழக்கம், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு, திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஒன்றுசேர வேண்டும்.
தமிழகத்தில் நூறு சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், மத்திய, மாநில அரசுகள் இடையே இணக்கம் தேவை. அதற்கு ஏற்ற கூட்டணியோடு, வெளியில் இருக்கும் அத்தனை கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக, ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றுசேர்க்க தமாகா பணியாற்றும்.
கூட்டணி கட்சிகள் இடையே ஏற்ற, இறக்கமின்றி, அவரவர் பலம், வேட்பாளர் செல்வாக்குக்கு ஏற்ப தேர்தல் களத்தில் நாம் செயல்பட்டால் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி உறுதி. அத்தகைய ஒருமித்த கருத்து, நமது கூட்டணியில் ஏற்படும் என நம்புகிறேன். தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணம், கூட்டணிக்கு நல்ல பலன் தரும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமிழருவி மணியன் பேசும்போது, “இந்த மண்ணில் மீண்டும் நேர்மையான, தூய்மையான அரசியல் நடைபெற வேண்டும். அந்த வகையில், காமராஜர் வழியில் தடம் மாறாமல் நடக்கும் ஜி.கே.வாசன் பின்னால் தமிழகம் திரள வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.
விழாவில், ஜி.கே.வாசனுக்கு நினைவு பரிசாக தமாகா மகளிர் அணி சார்பில் வேலும், தொழிலாளர் அணி சார்பில் கேடயமும் வழங்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர் லட்சுமிகாந்தன், தமாகா மாநில துணை தலைவர்கள் ஏ.எஸ்.சக்தி வடிவேல், விடியல் சேகர், முனைவர் பாட்சா, மாநில பொதுச் செயலாளர்கள் ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ், பி.ஜவஹர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT