Published : 17 Jul 2025 05:10 AM
Last Updated : 17 Jul 2025 05:10 AM
சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடியாத ராணுவத்தினர் ஆகியோர் பயன்பெறும் வகையில் உலக தரத்தில், எடை குறைவான ‘ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்துள்ளனர். டிரிம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இதற்கான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டது.
சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மருத்துவ பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் இந்த நாற்காலியை அறிமுகப்படுத்தினார். அவர் பேசும்போது, ‘‘மாற்றுத்திறனாளிகள், போரில் கால்கள் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு ஐஐடி உருவாக்கியுள்ள இந்த நவீன சக்கர நாற்காலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐஐடியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக கிராமப்புற மக்கள், தொலைதூர பகுதியில் வசிப்போருக்கு பயன்பட வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, சக்கர நாற்காலி வடிவமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி பொறியியல் துறை உதவி பேராசிரியருமான மணீஷ் ஆனந்த், இந்திய மருத்துவ ஆராயச்சி கவுன்சில் விஞ்ஞானி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான த்ரைவ் மொபிலிட்டி நிறுவனம் இந்த சக்கர நாற்காலிகளை வணிகரீதியில் தயாரிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. செய்தியாளர்களிடம் ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, ‘‘பொதுவாக சக்கர நாற்காலிகள் 17 கிலோ அளவுக்கு இருக்கும். இதை பயனாளிகள் பயன்படுத்த சற்று சிரமமாக இருக்கும். ஐஐடி உருவாக்கியுள்ள சக்கர நாற்காலியின் எடை 8.5 கிலோதான்.
குறைந்த எடையில், உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியானது, பாதுகாப்பானது. இதுபோன்ற சக்கர நாற்காலிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ரூ.2.40 லட்சம் செலவாகும். ஆனால், ஐஐடியின் சக்கர நாற்காலி ரூ.75 ஆயிரத்துக்கு கிடைக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT