Published : 17 Jul 2025 04:57 AM
Last Updated : 17 Jul 2025 04:57 AM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு போலி சான்றிதழ் மூலம் விண்ணப்பித்த 20 மாணவர்கள் 3 ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.25 கோடியில் நவீன கலையரங்கம், ரெட்டிக்குப்பம் சாலை, கோடம்பாக்கம் சாலையில் ரூ.3.55 கோடியில் மழைநீர் கால்வாய், திடீர் நகரில் ரூ.61 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 6 முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஆன்லைனில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உரிய சான்றிதழ்களை இணைக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தகுதி யானவர்களின் தரவரிசை பட்டியலை சரிபார்க்கும்போது, 20 பேரின் விண்ணப்பங்களில் போலி சான்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 7 பேர் பிறப்பிட சான்றிதழையும், 9 பேர் பிறப்பிட, சாதி சான்றிதழையும், 4 பேர் என்ஆர்ஐ தகுதிக்கான தூதரக சான்றிதழையும் போலியாக கொடுத்துள்ளனர்.
எனவே, 20 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது மீது சட்ட ரீதியான நடவடிக் கைகளும் எடுக்கப்பட உள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி முடிந்து, தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியல் ஜூலை 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதன்பிறகு, மத்திய அரசின் கால அட்டவணைப்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு 30-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT