Published : 16 Jul 2025 08:52 PM
Last Updated : 16 Jul 2025 08:52 PM
நாமக்கல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி பேச்சு புரியாதவர்கள், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக பல கருத்துகளைக் கூறி வருகின்றனர் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின்னர் பி.தங்கமணி, செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலுக்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை முதல்வர் நடத்தி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நலனைப் பற்றி ஆளும் திமுக அரசு கவலைப்படவில்லை. இனி எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
அதிமுக பொதுச் செயலாளரின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கிடைக்கும் வரவேற்பு, பாஜக கூட்டணி ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல் முதல்வர் ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்” என்றார்.
தொடர்ந்து, கே.பி.ராமலிங்கம் கூறும்போது, “தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் 2026 சட்டப்பேரவை தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கும் என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆட்சி அமைப்பார் என்பதை அவர் தெளிவாக கூறியிருந்தார். அவரது இந்தி மொழி பேச்சு புரியாதவர்கள் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
மேலும் பல கட்சிகள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வர உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எனது நண்பர், அவரைச் சந்தித்துப் பேச உள்ளேன். எந்தக் கட்சியும் தலித் சமுதாய மக்களுக்கு உரிமைகள், வாய்ப்புகள் வசதிகள், அமைச்சரவையில் இடமும் வழங்காத நிலையில், பாஜக தலித் மக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்கி உள்ளது. பாமக ஏற்கெனவே பாஜக கூட்டணியில்தான் உள்ளது என்பதை அக்கட்சியின் தலைமை தெரிவித்து விட்டது. இது தொடர்பாக பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜக மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஷ்குமார், செந்தில்நாதன் (கரூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT