Published : 16 Jul 2025 04:37 PM
Last Updated : 16 Jul 2025 04:37 PM
மதுரை: வேடசந்தூர் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயபால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், வேடசந்தூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத குவாரிகளை மூடவும், இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சட்டவிரோதமாக குவாரி நடத்தி வருவோரிடம் பணம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, குவாரியின் முன் நுழைவாயில் பூட்டப்பட்டு, பின்வாசல் வழியாக குவாரி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு தரப்பில், விதிமீறலில் ஈடுபட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கிருந்த இயந்திரங்களை சரிபார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை நடைபெறாமல் இருப்பதற்கான புகைப்படங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT