Published : 16 Jul 2025 12:15 PM
Last Updated : 16 Jul 2025 12:15 PM
மதுரை: ஆறாவது விரல் இருப்பதால் மத்திய காவல் படை பணிக்கு நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.பாலமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மத்திய பணியாளர் தேர்வாணையம் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ஆயுதப்படை (சிஆர்பிஎப்) உள்ளிட்ட மத்திய போலீஸ் படை காவலர்கள் தேர்வு தொடர்பாக 2023-ல் அறிவிப்பு வெளியிட்டது.
நான் காவலர் பணிக்கு விண்ணப்பித்தேன். அனைத்து தேர்வுகளிலும் வெற்றிப்பெற்ற நிலையில் 7.10.2024-ல் மருத்துவ தேர்வில் பங்கேற்றேன். மருத்துவ தேர்வுக்கு பிறகு, எனது இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி நான் காவலர் பணிக்கு நிராகரிக்கப்பட்டேன். என்னை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு காவலர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி விவேக் குமார் சிங் விசாரித்தார். மனுதாரர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் 2021-ல் வெளியிட்ட திருத்தப்பட்ட மருத்துவ தகுதி தேர்வு தொடர்பான வழிகாட்டுதலில், பணி செயல் திறனை பாதிக்காத வகையில் உடலில் சிறிய குறைபாடுகள் இருந்தால் அரசு பணி மறுக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மனுதாருக்கு கூடுதல் விரல் இல்லை. கட்டை விரல் உயரம் குறைவாக உள்ளது. இதை கூடுதல் விரல் எனக்கூறி பணி வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரை காவலர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
மத்திய அரசு சார்பில், திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் கூடுதல் விரல் இருந்தால் தகுதி நீக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கூடுதல் விரல் இருப்பதால் ஆயுதங்களை கையாள்வதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற குறைபாடுகள் உள்ளவர்களை காவல் படைகளில் சேர்ப்பது ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணி பாதுகாப்பான பணியாக அனைவரும் கருதுகின்றனர். முன்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பின்னர் நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அரசுப்பணி பாதுகாப்பான பணியாகவே கருதப்படுகிறது. மாற்றுத்திறன் என்பது கடவுளின் செயல். அதை மனித தவறாக கருத முடியாது. ஒருவரின் மாற்றுத்திறன் அவர் அரசுப் பணி பெறுவதற்கு தடையாக இருக்க முடியாது.
அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் சாதாரணமானவர்களை போல் செயல்பட முடிந்தவர்களை மருத்துவரீதியாக தகுதியற்றவர் என அறிவித்து பணி வழங்க மறுக்கக்கூடாது. இதுபோன்ற விவகாரங்களை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.
ஒருவரின் மாற்றுத்திறன் வேலை திறனை பாதிப்பதாக இருந்தால் மட்டுமே அதை சுட்டிக்காட்டி வேலை மறுக்க முடியும். ஒருவரின் உடல் குறைபாடுகள் அவரின் வேலை செய்யும் திறனை பாதிக்காத வகையில் இருக்கும் நிலையில் அவருக்கு வேலை மறுக்க தேவையில்லை. எனவே மனுதாரரின் மருத்துவ அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மத்திய காவல் பணிக்காக மனுதாரரின் மருத்துவ அறிக்கையை மறுசீராய்வு அல்லது மீண்டும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT