Published : 16 Jul 2025 10:58 AM
Last Updated : 16 Jul 2025 10:58 AM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.
‘மாஸ்’ காட்டிய விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் - விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் மிக நீண்ட உரையாற்றினார். “திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். பிளவுவாத சக்திகளும், ஊழல் மலிந்த அரசியலும் தான் நம் எதிரி.” என்று விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில் திமுகவை அப்பட்டமாக விமர்சித்தார். மத்திய அரசையும் ஓரளவுக்கு விமர்சனம் செய்தார்.
பிரம்மாண்டம், வசீகரப் பேச்சு, ஆர்ப்பரித்தக் கூட்டம் என விஜய்யின் முதல் மாநாடு மிக்கப்பெரிய கவனம் பெற்றது. அந்த மாநாடு அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முக்கிய நகர்வாக இருந்தது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 25-ல் மதுரையில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
மதுரையும், அரசியலும்.. தமிழக அரசியல் களத்தில் மதுரை மிக முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. மதுரையும் அரசியலும் பிர்க்க முடியாதவை. எம்ஜிஆர் காலம் தொட்டு மதுரைக்கும் புதிதாக அரசியலில் தடம் பதிப்பவர்களுக்கு ஒரு ‘ராசி’ இருக்கிறது. அந்த ‘ராசி’ விஜய்க்கு எப்படிப் பொருந்துகிறது என்று பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு விஜய் அறிவிப்பால் ஏற்பட்டுள்ளது.
அதுவும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களத்தின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ளும் வகையில் விஜய்யின் இந்த மதுரை மாநாடு அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். ‘தமிழகத்தைக் காப்போம்’ மக்களை மீட்போம்’ என்ற பெயரில் அவரது பிரச்சாரம் சூடு பிடிதுள்ளது. அதேபோல் ஆளும் திமுகவும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் தவெக மாநாடு மதுரையில் நடைபெறவிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சென்னை பனையூரில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் விஜய் தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார். அதன் மீது இன்னும் சற்று உறுதியான நிலைப்பாடு மதுரை மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT