Published : 16 Jul 2025 06:26 AM
Last Updated : 16 Jul 2025 06:26 AM
சென்னை: சென்னை மாநகரில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சென்னையில் உள்ள நீர்நிலைகளை பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், நீர்நிலைகளில் ஒருபோதும் ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சென்னையில் உள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன.
கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு போன்ற திட்டங்களின் மூலமாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் புற்றீசல் போல ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, அடையாறு கடலில் கலக்கும் கழிமுகம் உள்ள பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கரையோரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
எனவே, இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற 8 வார காலத்தில்சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, நீர் வள ஆதாரத்துறை, குடிசை மாற்று வாரியத்துறை என அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரங்களை ஆக்கிரமித்து வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களை 8 வாரங்களில் அங்கிருந்து அகற்றி, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, கூவம் ஆற்றை முழுமையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்புடும் என அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT