Published : 16 Jul 2025 05:37 AM
Last Updated : 16 Jul 2025 05:37 AM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திமுக செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் தலைமையில் சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது. இதில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பங்கேற்று, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மட்டுமே அதிகம் படித்தவர்கள் கேள்வி கேட்கின்றனர். அவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் முயற்சி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்தி திணிப்பு அதன்பின் நீட்தேர்வு. இந்தி படிக்காவிட்டால் கல்விக்கான நிதியை தரமாட்டோம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது.
அதை தமிழக அரசு தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதால், அவர்கள் கனவு தோல்வியடைந்துள்ளது. இப்போது கோயில்கள் மூலம் படிக்கும் மாணவர்களின் கல்வியை தடுக்க பார்க்கின்றனர். திருப்பதி தேவஸ்தானம், குருவாயூரப்பன் கோயில் சார்பில் பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.
முன்னாள் முதல்வர்கள் பக்தவத்சலம், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோயில் நிதியில் கல்லூரி கட்டவில்லையா? தமிழகத்தில்தற்போது கோயில்கள் சார்பில் 25 பள்ளிகள், 9 கலைக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி நடத்தப்பட்டு அறிவு தீபம் வளர்க்கப்பட்டு வருகிறது.
திமுகவினர் தேர்தல் வந்ததும் வீடுவீடாகச் சென்று கதவை தட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுகிறார். கரோனா காலத்தில் வீடுகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க கதவைத் தட்டிய இயக்கம் திமுக. கதவு தட்டுவதில் எங்களுக்கு கவுரவக் குறைச்சல் இல்லை என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT