Published : 16 Jul 2025 06:22 AM
Last Updated : 16 Jul 2025 06:22 AM
காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடங்கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 19 பேரின் நிலங்கள் பரந்தூர் விமான நிலையத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கான பணிகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தால் பாதிக்கப்படும் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஏகானாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராம மக்கள் அதிகளவில் பங்கேற்றனர். மற்ற கிராமங்களில் இருந்து குறைந்த அளவு பொதுமக்களே போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டதில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT