Published : 16 Jul 2025 05:55 AM
Last Updated : 16 Jul 2025 05:55 AM
சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது குறித்து ரயில் ஓட்டுநர், நிலைய அதிகாரி உட்பட 16 பேரிடம் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று விசாரணை தொடங்கியது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு 52 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்து 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. இதனால் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சேதமடைந்த ரயில் தண்டவாளம், உயர்நிலை மின்பாதை, மின்கம்பங்கள் ஆகியவை அடுத்த 2 நாட்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டன. இந்த பாதைகளில் மின்சார, விரைவு ரயில்கள் தற்போது வழக்கம்போல இயங்குகின்றன.
இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஒருங்கிணைப்பாளர் நிதின் நோர்பர்ட் உட்பட 4 பேர் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்திருந்தது. இக்குழுவின் முன் விசாரணைக்கு ஆஜராக 16 பேருக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் இவர்களிடம் நேற்று விசாரணை தொடங்கியது.
சரக்கு ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், மங்களூர் - சென்னைக்கு இயக்கப்பட்ட விரைவு ரயில் ஓட்டுநர், திருவள்ளூர் நிலையத்தின் நிலைய அதிகாரி, பாய்ன்ட் மேன், அந்த நேரத்தில் பணியில் இருந்த ஆர்பிஎஃப் போலீஸார், சிக்னல் மேற்பார்வையாளர், கச்சா எண்ணெய் அனுப்பிய எண்ணெய் நிறுவன வணிக மேற்பார்வையாளர் உட்பட 16 பேரிடம் 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவற்றுடன் அறிக்கை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT