Published : 16 Jul 2025 08:36 AM
Last Updated : 16 Jul 2025 08:36 AM
காரைக்குடி திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருப்பதால் சிவகங்கை மாவட்ட திமுக-வும் கிறுகிறுத்துக் கிடக்கிறது.
அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடி மாநகராட்சியில் திமுக-வைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், மாநகர திமுக செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் இருக்கிறார்கள். ஏற்கெனவே, சேர்மனாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால் முத்துத்துரை யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ‘கணக்காக’ செய்து வந்தார். அவரின் இந்த ‘அணுகுமுறை’யால் அதிமுக-வினர் சிலரே அவரிடம் சரண்டர் ஆகிக்கிடந்தார்கள். இந்த நிலையில் தான் திமுக துணை மேயரே வெகுண்டெழுந்து மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஆணையரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய காரைக்குடி திமுக-வினர் சிலர், “2006-ல், நகரச் செயலாளராக இருந்த துரை கணேசனை சேர்மன் வேட்பாளராக தலைமை அறிவித்தது. ஆனால், அதை எதிர்த்து அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கவுன்சிலர்களையும் தன்வசப்படுத்தி சேர்மனானார் முத்துத்துரை. தலைமையை எதிர்த்த முத்துத்துரையை கட்சியும் அப்போது வெற்றிக் கணக்கில் சேர்த்துக் கொண்டது. ஆனால், சேர்மன் பதவியில் ஐந்தாண்டுகள் ஜொலித்துவிட்டு அப்படியே சைலன்ட் ஆகிவிட்டார் முத்துத்துரை.
திமுக ஆட்சியில் இல்லாத போது குணசேகரன் தான் கைக்காசை செலவழித்து கட்சியை நடத்தினார். அதனால் அவருக்குத்தான் காரைக்குடி எம்எல்ஏ சீட் என்றார்கள். காரைக்குடி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் அடுத்து, சேர்மன் நீங்கள் தான் என குணசேகரனுக்கு ஆசை வார்த்தை காட்டினார்கள். குணசேகரனும் பெருத்த நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், சேர்மன் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இழுத்தடித்தவர்கள், தேர்தல் நாளன்று முத்துத்துரையை வேட்பாளராக அறிவித்தார்கள். அதனால் குணசேகரனால் எதையும் மாற்றி யோசிக்கமுடியவில்லை.
குணசேகரனை சாந்தப்படுத்த அவருக்கு வைஸ் சேர்மன் பதவி கொடுத்தார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததும் முத்துத்துரை குணசேகரனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாலும் மற்ற கவுன்சிலர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார் முத்துத்துரை. ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சினை எல்லாம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும் அமைச்சர் பெரியகருப்பன் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப் படுத்தினார். அப்படியும் முத்துத்துரை தன்னைத் திருத்திக் கொள்ளாததால் அதிருப்தி இன்னும் அதிகரித்தது. இந்த நிலையில் தான், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களையும் ஓரணியில் திரட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்திருக்கிறார் குணசேகரன்” என்றனர்.
இதுகுறித்து குணசேகரனிடம் கேட்டதற்கு, “துணை மேயர் மட்டுமல்லாது மாநகர் திமுக செயலாளராகவும் இருக்கும் என்னையே மேயர் மதிப்பதில்லை. யாரையும் ஒருமையில் பேசுவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. செந்தில்குமார் என்பவரை பினாமியாக வைத்துக் கொண்டு, அவருக்கே ஒப்பந்தங்களை வழங்கி வருகிறார். மேயரின் சுயநலத்தால் திமுக கோட்டையான காரைக்குடி வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கட்சிக்கும் அவப்பெயர். இனியாவது இந்த விஷயத்தில் அமைச்சர் பெரியகருப்பனும் முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேயர் தரப்பில் பேசியவர்களோ, “யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல் அனைத்துக் கவுன்சிலர்களையும் சிறப்பாக கவனித்து வருபவர் முத்துத்துரை. அப்படி இருக்கையில், சிலரது துண்டுதலால் சிலர் மேயருக்கு எதிராக கிளம்பியுள்ளனர். துணை மேயர் எழுப்பிய பிரச்சினை சீக்கிரமே சுமுகமாக முடிக்கப்பட்டு விடும்” என்றனர்.
10-ம் தேதி மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய மேயரோ, “காரைக்குடி திமுக சாதி அரசியலில் செல்கிறது” என்றதோடு முடித்துக்கொண்டார். மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து கேட்பதற்காக அவரது உதவியாளரை நாம் தொடர்பு கொண்டபோது, பேசுவதாகச் சொன்னவர் அதன் பிறகு லைனில் வரவில்லை. முத்துத்துரையை நேரடியாக தொடர்பு கொண்ட போது அவரும் நமது அழைப்பை ஏற்கவில்லை. ஓரணியில் தமிழ்நாடு என்று முழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின், அவரது கட்சியினரோ, எங்களுக்கெல்லாம் அது சரிப்பட்டு வராது என்பது போல் இப்படி அவரை இம்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT