Published : 16 Jul 2025 09:04 AM
Last Updated : 16 Jul 2025 09:04 AM
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்மைக்காலமாக பொது இடங்களில், ‘பொன்முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்காக பேசி எரிச்சலை உண்டாக்கினார் பெரியவர் கல்யாணசுந்தரம். இது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையான நிலையில், கல்யாணசுந்தரத்தால் அழுத்திவைக்கப்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் அண்மையில் அறிவாலயத்துக்கே சென்று கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியச் செயலாளராக இருக்கும் அவரது மகன் முத்துச்செல்வத்துக்கு எதிராக தங்களது மனக்குமுறலைக் கொட்டிவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தஞ்சை வடக்கு மாவட்ட திமுக-வினர் சிலர், “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கல்யாணசுந்தரத்தின் மகன் முத்துச்செல்வன் அதிகாரம் பண்ண ஆரம்பித்து விட்டார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்ட அவர், ஒருகட்டத்தில் தனது தந்தையின் ஆதரவாளர்களையே ஒதுக்க ஆரம்பித்தார்.
வடக்கு மாவட்டத்திற்குள் வரும் டாஸ்மாக் கடைகளில் முத்துச்செல்வனின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே வசூல் நடந்தது. ஒப்பந்தப்பணிகளில் 18 சதவீதம் வரைக்கும் கட்டிங் கேட்டதால் ஒப்பந்ததாரர்கள் தெறித்து ஓடினார்கள். கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக வேலை பார்த்த காண்ட்ராக்டர் ஒருவருக்கு காண்ட்ராக்ட் கொடுக்கக் கூடாது என திமுக-வினர் சொன்னதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், கமிஷனுக்காக ரோடு காண்ட்ராக்டை அவருக்கே தூக்கிக் கொடுத்தார் முத்துச்செல்வன்.
கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் மகனால் நடத்தப்படும் ‘மனமகிழ் மன்ற’ கிளப்புக்கு முத்துச்செல்வனின் அனுசரணையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். காண்ட்ராக்ட் விஷயங்கள் மட்டுமல்லாது, அரசு அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் விஷயங்களிலும் முத்துச்செல்வன் லகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறார். ஆனால், இப்படியெல்லாம் தன்னை வளப்படுத்திக் கொண்டாலும் கட்சியினர் யாருக்கும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. யாராவது எதிர்பார்ப்புடன் வந்தால் அவர்களை ஏதாவது காரணம் சொல்லி ஒதுக்கிவைத்துவிடுவார்.
2022-ல், கும்பகோணத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு அறிவாலயம் கட்டுமானப் பணிகளை கல்யாணசுந்தரம் தொடங்கினார். வருடம் மூன்றாகியும் இன்னமும் அந்தப் பணிகளை முடிக்கவில்லை. இதற்காக திரட்டப்பட்ட தொகையையும் தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டவர், கட்டிடப் பணிகளை முடித்தால் எங்கே தனது பதவியை பறித்துவிடுவார்களோ என்ற பயத்தில் முடிக்காமல் வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் இத்தனை நாளும் சகித்துக் கொண்டிருந்த வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிலர் பொறுமை இழந்து தான் தலைமைக்குப் போய் புகார் சொல்லி இருக்கிறார்கள். அப்பாவும் மகனும் நடத்தும் அதிரடி அரசியலால் கடந்த 4 ஆண்டுகளாக தாங்கள் மிகவும் வேதனைப்பட்டுக் கிடப்பதாகச் சொன்ன அந்த நிர்வாகிகள், ‘அதிமுக ஆட்சியில் இருந்ததை விட மிகவும் மோசமாக நடத்தப்படுகிறோம். 2026 தேர்தலுக்காக கட்சி தலைமை பணம் தந்தால் கூட அது கீழ்மட்டம் வரைக்கும் சென்று சேருமா என்று தெரியாது’ எனச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்” என்றார்கள்.
நிர்வாகிகளின் புகாரை அடுத்து கல்யாணசுந்தரத்தை அழைத்து விசாரணை நடத்திய திமுக தலைமை, “ஒன்றும் பிரச்சினை இல்லை... நீங்கள் போய் வழக்கம் போல கட்சி வேலைகளைப் பாருங்கள்” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு, பென் அமைப்பு மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் புகார்கள் தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விசாரணையின் அடிப்படையிலேயே கல்யாணசுந்தரத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக முத்துச்செல்வனின் ஒன்றியச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கும் தஞ்சையைச் சேர்ந்த கோவி.செழியனை அண்மையில் அமைச்சரவைக்குள் சேர்த்தார் ஸ்டாலின். அதேபோல் தொடர்ந்து மூன்றாவது முறையாக கும்பகோணம் எம்எல்ஏ-வாக இருக்கும் சாக்கோட்டை அன்பழகனுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பை இப்போது வழங்கி இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT