Published : 16 Jul 2025 04:44 AM
Last Updated : 16 Jul 2025 04:44 AM
சென்னை: காமராஜரின் 123-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த தினம் நேற்று தமிழக அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி அரியலூரில் காமராஜரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகர், திருமலை பிள்ளை சாலையில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாசாலை ஜிம்கானா கிளப் எதிரே உள்ள காமராஜரின் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின்: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம், நல்ல வேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழகத்துக்கு இன்று. கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்குப் புகழ் வணக்கம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: காமராஜர் கண்ட கல்விக் கனவுகளை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களின் வழியே நனவாக்கி வருகிறது நம் திராவிட மாடல் அரசு.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பேச்சை குறை செயலை அதிகமாக்கு என்ற தத்துவத்தை கடைபிடித்து தன்னலமற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் காமராஜர்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில், கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் காமராஜர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் காமராஜர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: லட்சியவாத அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அரசியல் மாண்புக்கும் நிர்வாக ஆளுமைக்கும் இக்காலத்திலும் சான்றாக நிற்கிறார்.
தவெக தலைவர் விஜய்: பெருந்தலைவர் காமராஜர் தமது ஆட்சியில் மதத்சார்பின்மையையும், நிர்வாகத்தில் நேர்மையையும், கடைபிடித்தவர். சமூகநீதி கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரம் அளித்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்றவர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தமிழகத்தின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராமல், தமிழ் மண்ணைக் காப்பாற்ற, ஓர் அணியில் திரண்டு, தமிழக கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT