Published : 15 Jul 2025 04:10 PM
Last Updated : 15 Jul 2025 04:10 PM
மதுரை: கொள்ளிடம் ஆற்று தண்ணீரை தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறு அன்பில் கிராமம் வழியே செல்கிறது. இந்த ஆற்று நீரே குடிநீராகவும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக குழாய்கள் வழியாக குடிதண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோத மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று நீர் பற்றாக்குறைக்கு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறத்தாழ 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 1000 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை கட்டக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில் புதிய குடிநீர் திட்டங்களின் பெயரில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
திருச்சி ஆனந்தமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் நீரேற்று குழாய்கள் அமைக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருச்சி லால்குடி ஆனந்தமேடு கிராம கொள்ளிடம் ஆற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய்கள், நீரேற்று பைப்புகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலக பயன்பாட்டுக்கும் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "அது அரசின் கொள்கை முடிவு. அதில் எப்படி தலையிட இயலும்?” என கேள்வி எழுப்பினர்.
அரசுத் தரப்பில், "குடிநீர் தேவைக்காக மட்டுமே கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலக பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT