Last Updated : 15 Jul, 2025 03:41 PM

5  

Published : 15 Jul 2025 03:41 PM
Last Updated : 15 Jul 2025 03:41 PM

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு: கம்யூ., மதிமுக கண்டனம்

கருணாநிதி சிலை மீது வீசப்பட்ட கறுப்பு பெயின்ட்டை அகற்றும் பணி. | படங்கள்: எஸ்.குருபிரசாத்

சென்னை: சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்ட சம்பவத்தை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: “சேலம் - அண்ணா நகர் பூங்கா முன்பு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலை மீது சமூக விரோதிகள் கறுப்பு பெயின்டை வீசி அவமதித்துள்ளனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு போர்த்துவது, பெரியார் - அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது என்பன போன்ற அவமதிக்கும் செயல்கள் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் பலரும் சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதை பார்க்க முடிந்தது.

கருத்துகளை எதிர்கொள்வதற்கு பதிலாக கருத்தை சொல்லும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது, மறைந்த தலைவர்கள் என்றால் அவர்களின் சிலையை சேதப்படுத்துவது, சிலைக்கு கருப்புச் சாயம், காவிச் சாயம் பூசுவதன் மூலம் அவமதிப்பது என்பது ஒரு போக்காகவே மாறியிருக்கிறது. இது நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல.

கருணாநிதியின் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய செயல்களுக்குப் பின்னால் கலவர நோக்கங்கள் உள்ளனவா என்பதை காவல் துறை கண்டறிய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.”

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்: “தமிழக மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் பெற்றுத் திகழும் மறைந்த முன்னாள் முதல்வர் சிலை, அண்மையில் சேலம் மாநகரில் அண்ணா பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசி, அவமதிக்கும் ஈனத்தனமான செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலை காவிமயமாக்கி வரும் சங் பரிவார் கும்பல் இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டு வருவதை இதுவரை நடந்த சம்பவங்களின் விசாரணை நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளன.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவர் சிலைக்கு காவி பூசி, பூணூல் போட்டதும், பெரியார், அண்ணல் அம்பேத்கர், எம்ஜிஆர் என மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் தலைவர்களின் சிலைகளை உடைத்தும், வண்ணம் பூசியும், சுய மகிழ்வு கொள்ளும் கூட்டம் இப்போது கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தமிழ்நாட்டை பெரும் அமளிக் காடாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் சதியின் ஒரு வடிவமாகும்.

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறது.”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது சமூக விரோதிகள் கறுப்பு பெயின்ட் பூசி அவமதிப்பு செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக மோத முடியாத சக்திகளே பெரியார், அம்பேத்கர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசுவதும், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் அரசியல் பண்பாட்டை சிதைத்து அமைதியை சீர்குலைக்க முயலும் இத்தகைய சக்திகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x