Last Updated : 15 Jul, 2025 12:58 PM

1  

Published : 15 Jul 2025 12:58 PM
Last Updated : 15 Jul 2025 12:58 PM

காமராஜர் பிறந்தநாள்: ஆளுநர் ரவி, இபிஎஸ் உள்ளிட்டோர் புகழாரம்

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்திகளை அளித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ரவி: பெருந்தலைவர் கே. காமராஜர் பிறந்தநாளில், அவருக்கு நன்றிப்பெருக்குடன் இந்த தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. அவர் ஒரு தேசபக்தி நிறைந்த தேசியவாதி, துணிச்சல்மிகு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் நவீன தமிழ்நாடு மீது தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியாக விளங்கினார்.

ஒவ்வோர் கிராமத்திலும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் கல்வியை உலகளாவியதாக மாற்றினார், புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடினார், சமூக நீதியை முன்னெடுத்தார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் விவசாயத்தை புத்துயிர் பெறச்செய்தார்.

பெரிய தொழில்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்ததுடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த சூழல் அமைப்பை வளர்த்தெடுத்தார். அவரது தொலைநோக்குப் பார்வை அணைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பை வடிவமைத்தன. மேலும், கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் மின்சார சேவைக்கான அணுகலை விரிவுபடுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டினார்.

இன்று, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது - அதற்கு காரணமான அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் உள்ளடக்கிய தலைமைக்கு நன்றி. எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றில் வேரூன்றிய அவரது வாழ்க்கை மற்றும் மரபு, 2047 ஆம் ஆண்டுக்குள் உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தில் நம்மை தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துகின்றன.

எடப்பாடி பழனிசாமி: கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர். சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர். நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்: எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை - எளிய பிள்ளைகள் எல்லோருக்கும் சென்று சேர பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்ட காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தார் கருணாநிதி.

காமராஜர் வாழ்ந்த தியாகராய நகர் இல்லத்தை புதுப்பிப்பதோடு, அவர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திருச்சியில் அமைக்கிறார் நம் முதல்வர் ஸ்டாலின். காமராஜர் கண்ட கல்விக்கனவுகளை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களின் வழியே நனவாக்கி வருகிறது நம் திராவிட மாடல் அரசு. பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் - வழிகாட்டும். அவர் புகழ் ஓங்கட்டும்.

அன்புமணி: தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் அவர். அவர் எத்தகைய ஆட்சியைக் கொடுத்தாரோ, அத்தகைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு மீண்டும் கிடைக்கும் என்றால் அது தான் உண்மையான பொற்காலமாக இருக்கும். அதை ஏற்படுத்துவதற்காக உழைக்க நாம் அனைவரும் அப்பெருமகனின் பிறந்தநாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

டிடிவி: ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x