Published : 15 Jul 2025 12:33 PM
Last Updated : 15 Jul 2025 12:33 PM
வேலூர்: ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்று காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதங்கத்துடன் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் தொடக்கவிழா காட்பாடி செங்குட்டையில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, "பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கும் மனுக்களுக்கு சாக்கு, போக்கு சொல்லாமல் உடனடியாக நிவர்த்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் இங்கு வந்ததில் இருந்து சிறப்பாக வேலை செய்கிறார். அவர் மட்டும் வேலை செய்தால் போதாது. உடன் இருக்கின்ற அதிகாரிகளும் சரியாக இருந்தால் தான் பரிகாரம் கிடைக்கும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலினை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில், 'நடிகர் ரஜினிகாந்த் சீனியர்களின் ஆலோசனை ரொம்ப முக்கியம் என பேச நினைத்ததை மறந்துவிட்டேன்' என நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்’ என்ற கேள்விக்கு, துரைமுருகன் கூறும்போது, 'நானும் அந்த வீடியோவை பார்த்தேன். அவரை செல்போனில் தொடர்புகொண்டு இப்பவாச்சும் மறக்காம பேசுனீங்களே ரொம்ப தேங்க்ஸ் சார் என்றேன்' என கூறினார்.
பின்னர், 'அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்து விசாரிப்போம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே’ என்ற கேள்விக்கு, 'அவர் வந்த காலத்துக்கு பாத்துக்கலாம்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT