Published : 15 Jul 2025 12:24 PM
Last Updated : 15 Jul 2025 12:24 PM
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல்ஹாசன், வருகிற 25-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதனடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பத்மராஜன் உட்பட 7 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூன் 10ம் தேதி சட்டப்பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன.
இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என பழனிசாமி வேட்புமனு தாக்கல் படிவங்களில் கையெழுத்திட்டிருப்பதால், அதிமுகவினரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அதிமுக வேட்பாளர்கள் இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
இதையடுத்து, திமுக வேட்பாளர்களான பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றித் தேர்வாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT