Published : 15 Jul 2025 05:20 AM
Last Updated : 15 Jul 2025 05:20 AM
சென்னை: பணி நிரந்தரம் கோரி 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது.
அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற போராட்டம் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இப்போராட்டம் 7-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை எந்நேரமும் முற்றுகையிடலாம் எனக்கருதி டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நேற்று மதியம் 12 மணியளவில், டிபிஐ வளாகம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவர்கள் கூட்டமாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று அருகே நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT