Published : 15 Jul 2025 05:51 AM
Last Updated : 15 Jul 2025 05:51 AM

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.7.50 லட்சம் இழப்பீடு: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

மடப்புரத்தில் அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி. உடன் தமிழரசி எம்எல்ஏ.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை (29) போலீஸார் விசாரணையின்போது தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் குமார் ஆகியோருக்கு செல்போன் மூலம் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து முதல்வர் உத்தரவுப்படி முதல்கட்டமாக ஜூலை 2-ம் தேதி அஜித்குமார் சகோதரருக்கு காரைக்குடி ஆவினில் தொழில் நுட்புநர் பணிக்கான ஆணை மற்றும் அவர்களது குடும்பத்துக்கு 3 சென்ட் இடத்துக்குரிய வீட்டு மனைக்கான ஆணை ஆகிய வற்றை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

இதற்கிடையே தனக்கு ஆவின் நிர்வாகத்தில் வேலை வழங்கியதில் திருப்தி இல்லை. மதுரையில் ஏதேனும் ஓர் அரசு துறையில் பணி வழங்கியிருந்தால் நன்றாக இருக்கும். இலவச வீட்டு மனையிடமும் தேளி கிராமத்துக்கு அருகே அடிப்படை வசதி மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழங்கியதால் பயனில்லை என அஜித்குமார் சகோதரர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

மேலும் அஜித் குமார் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் அஜித்குமார் வீட்டுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி ஆகியோர் வந்தனர். பின்னர் அமைச்சர் ரூ.7.50 லட்சத்துக்கான காசோ லையை அரசு சார்பில் அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கினார்.

மேலும் மதுரை ஆவின் நிறுவனத்துக்குப் பணிநியமன ஆணையை மாற்றவும், வீட்டு மனையிடத்தை மாற்று இடத்தில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அப்போது தமிழரசி எம்எல்ஏ, கோட்டாட்சியர் விஜயகுமார், பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x