Published : 15 Jul 2025 05:14 AM
Last Updated : 15 Jul 2025 05:14 AM
சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசாக திமுக அரசு உள்ளது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாள்களாகும் நிலையில், இதுவரை நிறைவேற்றவில்லை.
இரண்டாவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடமிருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது.
திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் மூலமாகவும், ராமதாஸ் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாமக கருதுகிறது.
அதன் தொடக்கமாக தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20-ம் தேதி, இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.
இதை மனதில் கொண்டு பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளி தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துகாட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன்.
வன்னிய மக்களின் சமூக நீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT