Published : 14 Jul 2025 07:45 PM
Last Updated : 14 Jul 2025 07:45 PM
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் தலா, ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதம் கடந்தும், சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும்” என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT