Last Updated : 14 Jul, 2025 05:20 PM

 

Published : 14 Jul 2025 05:20 PM
Last Updated : 14 Jul 2025 05:20 PM

புதுச்சேரியில் ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதோடு, பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளது.

புதுச்சேரி மாநில இந்து முன்னணி சார்பில் காமாட்சி அம்மன் கோயில் சொத்துகளை அபகரித்தவர்களிடம் இருந்து கோயில் சொத்துகளை மீட்க கோரியும், கோயில் சொத்துகளை அபகரித்த பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை கண்டித்தும் சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சனில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் பங்கேற்று, ஜான்குமாரை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மாநில தலைவர் சனில்குமார் கூறுகையில், "புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்த விவகாரத்தில் ஜான்குமார் சிக்கியிருக்கிறார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி சார்பில் பாஜக தலைமையகத்துக்கு நாங்கள் புகார் மனு அனுப்பி இருந்தோம்.

இந்நிலையில், ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இந்து மதத்துக்கு எதிரானது. கோயில் சொத்துகளை அபகரித்தவர் அமைச்சர் ஆகக் கூடாது. இதை பாஜக தலைமையகம் உணர வேண்டும். கோயில் சொத்து அபகரித்தவர்கள் யாரும் நன்றாக இருக்க முடியாது. கோயில் சொத்துகளைத் திருடியோர், வரும் தேர்தலில் தோற்பார்கள்.

திருடர்களுக்கு மாண்புமிகு என்று கொடுத்துவிட்டால் மாண்புமிகு என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஊரில் இருக்கும் அனைத்து திருடர்களையும், கொள்ளையர்களையும் மாண்புமிகு என்று அழைக்க வேண்டிய சூழ்நிலை வரும்” என்றார். இந்தப் போராட்டத்தில் ஜான்குமாருக்கு பதவி வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிஸ்ட் எதிர்ப்பு போராட்டம்: நேரு விதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், பிரபுராஜ், சீனிவாசன் சத்யா உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, மோசடி பேர்வழிகளை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்து மாநில மக்களின் நிதியை விரயம் செய்யும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், “ஆறு மாத காலமே ஆட்சியுள்ளது. கோயில் நில மோசடி புகழ் உடையவரை அமைச்சராக்குகிறார்கள். மக்கள் வரிப் பணம் வீணாக்கப்படுகிறது. நியமன எம்எல்ஏக்களில் வழக்குடையோர் நியமிக்கப்படுகின்றனர். அதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x