Published : 14 Jul 2025 04:39 PM
Last Updated : 14 Jul 2025 04:39 PM
சென்னை: சிறைக் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கெனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிமிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும் கைதிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக சுற்றித் திரிவதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நாங்கள் கைதிகள் போல அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைக்காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சிறைத்துறை மீது எழுந்திருக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT