Published : 14 Jul 2025 11:36 AM
Last Updated : 14 Jul 2025 11:36 AM

மக்களிடம் எடுபடுகிறதா எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம்? - ஒரு பார்வை

2026 சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் தமிழகத்தில் இப்போதே தகிக்க ஆரம்பித்துவிட்டது. திமுக சார்பில் தேர்தல் பணிகளையும், பரப்புரைகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமியும் களத்துக்கு வந்துள்ளார். அவரின் பிரச்சாரம் எடுபடுகிறதா? மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவுக்கு அதிகம் கைகொடுப்பது கொங்கு மண்டலமும், தென்மண்டலமும்தான். ஓபிஎஸ், தினகரன் சலசலப்பால் தென்மண்டலத்தில் இப்போது அதிமுக சற்று சுணக்கமாக உள்ளது. இதனால் கொங்கு மண்டலமான கோவையிலிருந்து தனது ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம் முதலில் அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 2026 தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி புதிய கட்சிகள் வரை மாநாடு, பேரணிகள் என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமைதியோ அமைதியாக இருந்த அதிமுகவும் களத்துக்கு வந்துள்ளதால் ரத்தத்தின் ரத்தங்கள் ஏக உற்சாகத்தில் உள்ளனர்.

அதேபோல, ‘அதிமுக மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை, இபிஎஸ் மக்களை சந்திப்பதில்லை’ என எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்களையும் இந்த சுற்றுப்பயணம் மூலமாக உடைத்தெறிந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனையே தங்களின் பெரிய வெற்றியாக பார்க்கின்றனர் அதிமுகவினர்.

சரி, இபிஎஸ் பிரச்சாரம் மக்களிடம் எடுபடுகிறதா? இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஊர்களில் பெருமளவில் அதிமுகவினர் குவிகின்றனர். அந்தக் கூட்டத்தினரிடையே பேசும்போது இபிஎஸ் நான்கு விஷயங்களை பிரதானப்படுத்துகிறார்.

ஒன்று, திமுக ஆட்சியின் இன்றைய அவலங்கள். இரண்டு, திமுக ஆட்சி நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள். மூன்றாவது, அதிமுக ஆட்சியின் கடந்த கால சாதனைகள். நான்காவதாக, 2026 தேர்தலுக்கான வாக்குறுதிகள். இவை நான்குமே அதிமுகவினரை தாண்டி பொதுத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது என்பதே உண்மை.

இபிஎஸ் தனது பிரச்சாரத்தில், திமுக ஆட்சியில் இப்போது சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, காவல் நிலைய மரணங்கள், டாஸ்மாக் ஊழல், போதைப்பொருள் கலாச்சாரம், அனைத்து துறைகளிலும் ஊழல், அமைச்சர்களின் அதிகார மீறல்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்துகிறார்.

முக்கியமாக, ஆட்சி நிர்வாகம் தொடங்கி, சினிமா துறை வரை அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை பேசுகிறார். இதன் மூலமாக குடும்ப அரசியலுக்கு எதிரான குரலை வலுவாக எழுப்பத் தொடங்கியுள்ளார். அதேபோல திமுக கூட்டணி கட்சிகளையும் விளாச ஆரம்பித்துள்ளார்.

அடுத்ததாக, திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளான மாதம்தோறும் மின்கட்டண கணக்கீடு, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்துக்கான நடவடிக்கை, விவசாயிகளுக்கான நிவாரணம், தொழில்துறை கோரிக்கைகள் போன்றவற்றை பேசுகிறார்.

தொடர்ந்து அவரின் பேச்சில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிடுகிறார். அதில், தாலிக்குத் தங்கம், விவசாயிகளுக்கான நிவாரணம், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, இலவச லேப்டாப், அம்மா உணவகம், அம்மா கிளினிக், இருசக்கர வாகன மானியம், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை அடுக்குகிறார்.

அதேபோல, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதில் நிறுத்தப்பட்ட திட்டங்களை தொடருவோம் என்றும் இபிஎஸ் உறுதி சொல்கிறார்.

குறிப்பாக, 2026 தேர்தலுக்காக அவர் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் அளிக்க தொடங்கியுள்ளார். அதன்படி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார். இது பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் ஹைலைட்டான இன்னொரு விஷயம்... எடப்பாடி பழனிசாமி தான் பிரச்சாரம் செய்யும் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பற்றியும் பேசுகிறார். இது தொகுதிக்குள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கவனிக்கத்தக்க விஷயமாக, தனது சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வுக்கு கூட்டணி கட்சியான பாஜகவையும் அழைத்தார் இபிஎஸ், அவர்களும் கலந்துகொண்டனர். தற்போது இபிஎஸ் பேசும் இடங்களில் எல்லாம், அதிமுக கொடியோடு பாஜக கொடிகளும் இடம்பெறுகின்றன. ஒருபக்கம் கூட்டணி கட்சியாக பாஜகவோடு இணக்கம் காட்டினாலும், மறுபக்கம் ‘அதிமுக தனிப்பெரும்பான்மையும் ஆட்சியமைக்கும்’ என பல இடங்களில் பேசுகிறார் அவர். இதனை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பது போகப் போகத்தான் தெரியும்.

அறநிலையத் துறை கல்லூரிகள் பற்றி இந்தப் பிரச்சாரத்தில் இபிஎஸ் பேசியது முதல்வர் ஸ்டாலினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பேச்சுக்கு சுடச்சுட முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை பதில் கொடுத்து வருகின்றனர். இதுவே இபிஎஸ் பேச்சு ஓரளவு மக்களிடம் சென்றுவிட்டதற்கான சான்றுகள்தான்.

தொடர்ந்து இதே ரூட்டில் சென்று மக்களிடம் தனது பிரச்சாரத்தை ஆழமாக இபிஎஸ் பதியவைப்பாரா? அது, தேர்தல் வெற்றிக்கான வாய்ப்பாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x