Published : 14 Jul 2025 05:54 AM
Last Updated : 14 Jul 2025 05:54 AM
சென்னை: மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு, கணக்கீட்டு கருவியை மின்வாரியமே கொள்முதல் செய்து தர வேண்டும் என, தமிழக மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 44 மின் வட்டங்களில், ஒவ்வொரு மின் வட்டத்துக்கும் 10 பிரிவு அலுவலகங்களை தேர்வு செய்து, அதில் பணிபுரியும் கணக்கீட்டாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி மின்வாரியத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து கணக்கீட்டு பணியை செய்ய மின்வாரிய தலைமை உத்தரவு பிறப்பித்தது.
பிரிவு அலுவலர்களின் நிர்பந்தத்தால், தமிழகம் முழுவதும் உள்ள மின்வட்ட கிளைகளில் பணிபுரியும் கணக்கீட்டாளர்கள், கணக்கீட்டு ஆய்வாளர்கள் தற்போது வரை தங்களின் செல்போனை பயன்படுத்தி செயலி மூலம் கணக்கீட்டு பணியை செய்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க, 5 முறை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் எங்களுடைய கோரிக்கைகளில் மிக முக்கியமானவையாக உள்ளவற்றை வாரிய நிர்வாகம் இதுவரை நிவர்த்தி செய்யவி்ல்லை. மின்வாரியம் புதிய மொபைல் வாங்க ரூ. 10 ஆயிரம் மட்டும் கணக்கீட்டாளர்களிடம் தருகிறது. அதற்குப் பதிலாக, மின்வாரியமே மொபைல் போன் வாங்கித் தரலாம். அல்லது புதுச்சேரி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ளது போல, இந்த கணக்கீட்டு தொழில் நுட்பம் மட்டும் உள்ள கருவியை கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.
மொபைல் அல்லது கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து கொடுத்தால் மட்டுமே, அதில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்து கொடுக்க மின்வாரியம் பொறுப்பு ஏற்க முடியும் இல்லையெனில், பழுதை சரிசெய்ய உரிய கணக்கீட்டாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். கணக்கீட்டாளருக்கு மொபைல் வாங்க நேரடியாக பணம் கொடுக்காமல், மின்வாரியமே மொத்தமாக கொள்முதல் செய்தால், குறைந்த விலையில் கூடுதல் தரத்தோடும்.
கூடுதல் பாதுகாப்பு உத்தரவாத காலத்தையும் பெறமுடியும். அந்தந்த பகுதியில் சிறப்பாக நெட்ஒர்க் கிடைக்கும் சிம்கார்டுகளை பிரிவு அலுவலகங்கள் மூலமாக கொள்முதல் செய்து கணக்கீட்டாளருக்கு வழங்க உரிய உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT