Published : 14 Jul 2025 05:18 AM
Last Updated : 14 Jul 2025 05:18 AM
சென்னை: முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டு தோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நடப்பு கல்வியாண்டு (2025-26) அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறும்போது, “141 கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை, நூலகங்கள், ஆய்வகங்கள் குறைபாடு போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை. இந்த கல்லூரிகள் குறைபாடுகளை 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த பின்னரே இணைப்பு அங்கீகாரம் உறுதி செய்யப்படும்” என்றனர்.
இதனிடையே, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கும் சூழலில், அண்ணா பல்கலை.யின் நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கல்லூரியின் சேர்க்கை பெற்றபின் அதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். எனவே, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT