Published : 14 Jul 2025 05:15 AM
Last Updated : 14 Jul 2025 05:15 AM
சென்னை: கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை பெறுவதில் விசிக உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2 தனித்தொகுதி, 1 பொதுத்தொகுதிக்காக கடுமையாக போராடியது.
ஆனால், 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கிய நிலையில், இரண்டிலும் சொந்த சின்னத் தில் போட்டியிட்டு மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்த அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டிய நிலையில் விசிக உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படியானால் இரட்டை இலக்கத் தொகுதியில் போட்டியிடுவது அவசியம்.
அந்த வகையில் விசிகவின் வளர்ச்சியை முன்வைத்து திமுகவிடம் தொகுதியை கேட்டுப் பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அழுத்தங்களை முதல்வரை சந்திக்கும்போதும், திமுக மூத்த நிர்வாகிகள் மத்தியிலும் விசிகவினர் முன்வைத்து வருகின்றனர்.
மறுமுனையில் அதிமுக கூட்டணியும் நாளுக்கு நாள் வலுவாக மாறி வருகிறது. அவர்கள் அரசு சறுக்கும் சின்ன விஷயத்தையும் விடமால் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் திமுகவுக்கு முக்கியம் என்ற நிலையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என விசிக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விசிக செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் கூறும்போது, “தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விசிக உருமாறியுள்ளது. கூட்டணி கட்சிகளிடையேயான வாக்கு பரிமாற்றத்துக்கு விசிக முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. வரும் தேர்தலில் வடமாவட்டங்கள் மட்டுமின்றி 4 திசைகளிலும் முக்கிய தொகுதிகளை விசிக எதிர்நோக்குகிறது. இதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT