Published : 14 Jul 2025 12:22 AM
Last Updated : 14 Jul 2025 12:22 AM

திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை - நடந்தது என்ன?

சென்னையில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர்கள் அடுத்தடுத்து வெடித்ததில், நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

திருவள்ளூர்/ சென்னை: சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்​சார ரயில் சேவை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

சென்னை துறை​முகத்​தில் இருந்து 2 இன்​ஜின்​கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதி​காலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலை​யத்​துக்கு புறப்​பட்​டது. தலா 70 ஆயிரம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட 45 டேங்கர்​களில் டீசலும், 5 டேங்கர்​களில் பெட்​ரோலும் நிரப்​பப்​பட்​டிருந்​தது. நேற்று அதி​காலை 4.55 மணி அளவில் திரு​வள்​ளூர் ரயில் நிலை​யத்தை கடந்து சென்​ற​போது, 2 இன்​ஜின்​கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனி​யாக பிரிந்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், ரயில் நிலை தடு​மாறி, 18 டேங்கர்​கள் அடுத்​தடுத்து தடம்​புரண்​டன. பெட்​ரோல், டீசல் நிரப்​பிய டேங்கர்​கள் ஒன்​றோடு ஒன்று மோதி​ய​தில் திடீரென தீப்​பற்​றிக்​கொண்​டது. மளமளவென மற்ற டேங்கர்​களுக்​கும் தீ பரவிய​தில், டேங்கர்​கள் வெடித்து சிதறின. இதனால், பல அடி உயரத்​துக்கு நெருப்பு கொழுந்​து​விட்டு எரிந்​தது.

திரு​வள்​ளூர் ரயில் நிலைய மேலா​ளர் உடனடி​யாக ரயில் பாதை​யில் செல்​லும் உயர்​நிலை மின் இணைப்பை துண்​டித்​தார். ரயில்வே அதி​காரி​கள் கொடுத்த தகவலின்​பேரில், திரு​வள்​ளூர், திரு​வூர், தேர்​வாய் கண்​டிகை சிப்​காட், ஸ்ரீபெரும்​புதூர், அம்​பத்​தூர் உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து 15-க்​கும் மேற்​பட்ட தீயணைப்பு வாக​னங்​கள் விரைந்து வந்​தன. ரசாயன நுரை மற்​றும் தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைக்​கும் பணி​யில் வீரர்​கள் ஈடு​பட்​டனர். பெட்​ரோல், டீசல் அதிக அளவில் சிதறிய​தால் ஆங்​காங்கே தீ எரிந்​த​படி இருந்​தது.

மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர்: அருகே குடி​யிருப்பு பகு​தி​கள் இருந்​த​தால், பதற்​றம் ஏற்​பட்​டது. திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் பிர​தாப், எஸ்​.பி. சீனி​வாசபெரு​மாள் தலை​மை​யில் வரு​வாய் துறை​யினர், போலீ​ஸார், மின்​வாரிய அதி​காரி​கள் விரைந்து வந்​து, விபத்து பகுதி அருகே மின் இணைப்பை துண்​டித்​தனர். அப்​பகு​தி​யில் வசிக்​கும் 50 இருளர் குடும்​பங்​களை சேர்ந்​தவர்​கள் உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தப்​பட்​டு, திரு​வள்​ளூர் பெரியகுப்​பம் பகு​தி​யில் முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர்.

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலா​ளர் விஸ்​வ​நாத் ஈர்யா தலை​மையி​லான ரயில்வே அதி​காரி​கள், ரயில்வே ஊழியர்​கள், அரக்​கோணத்​தில் இருந்து வந்த 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழு​வினர் விரைந்து வந்​து, தீயில் சிக்​காத 32 டேங்கர்​கள், ரயில் இன்​ஜின்​களை அகற்​றி, பாது​காப்​பாக வேறு இடத்​துக்கு கொண்டு சென்​றனர். தீயணைப்பு வீரர்​கள் 11 மணி நேரம் கடுமை​யாக போராடிய நிலை​யில், மாலை 4 மணி அளவில் தீயை அணைத்​தனர். தொடர்ந்​து, சேதமடைந்த ரயில் பாதைகள், உயர்​நிலை மின்​கம்​பிகளை சீரமைக்​கும் பணி​யில் ரயில்வே அதி​காரி​கள், ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். இப்பணிமாலை 6 மணிக்கு பிறகும் நீடித்தது.

இந்த விபத்​தில், டீசல் நிரப்பிய 14 டேங்கர்கள், பெட்ரோல் நிரப்பிய 4 டேங்கர்கள் முற்​றி​லும் நாச​மாகின. அந்த டேங்கர்​களில் இருந்த சுமார் ரூ.12 கோடி மதிப்​பிலான பெட்​ரோல், டீசல் எரிந்து நாச​மான​தாக தீயணைப்பு துறை​யினர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அமைச்​சர் சா.​மு.​நாசர், தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.எம்​.சிங் ஆகியோர் வந்​து, சீரமைப்பு பணி​களை பார்​வை​யிட்​டனர். தமிழக ரயில்வே காவல் துறை ஐ.ஜி. பாபு, காவல் கண்​காணிப்​பாளர் ஈஸ்​வரன் ஆகியோர் ஆய்வு செய்​தனர். தமிழக ரயில்வே காவல் துறை ஏடிஜிபி தலை​மையி​லான 3 தனிப்​படை​யினர் விபத்து குறித்து விசா​ரணை நடத்​துகின்​றனர். விபத்து குறித்து விசா​ரிக்க விசா​ரணை குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.என்.சிங் உத்​தர​விட்​டுள்​ளார்.

79 ரயில் சேவைகள் பாதிப்பு: சரக்கு ரயில் தீ விபத்​தால், சென்னை - அரக்​கோணம் மார்க்​கத்​தில் விரைவு ரயில், புறநகர் மின்​சார ரயில் சேவை நேற்று கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. சென்னை சென்ட்​ரல் - மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், திருப்​ப​தி சப்​தகிரி விரைவு ரயில் உட்பட 8 ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. காச்​சிகுடா - செங்​கல்​பட்டு விரைவு ரயில் உட்பட 8 ரயில்​கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பட்​டன.

நேற்று மாலை 6 மணி நில​வரப்​படி, 79 விரைவு ரயில்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. புறநகர் மின்​சார ரயில் சேவை​யும் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டதால், பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில் சேவை பா​திக்​கப்​பட்​டதால், அரசு போக்​கு​வரத்து கழகம்
(விழுப்​புரம் கோட்​டம்) சார்​பில் காட்பாடி, குடி​யாத்​தம்​, அரக்​கோணம்​,திரு​வள்​ளூர்​, திருத்​தணி ரயில்​ நிலையங்​களில்​ இருந்​து 270-க்​கும் மேற்​பட்​ட சிறப்​பு பேருந்​துகள்​ இயக்கப்​பட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x