Published : 13 Jul 2025 10:33 PM
Last Updated : 13 Jul 2025 10:33 PM
விருதுநகர்: அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுவரை முடிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து பூத்களையும் வலிமையாக்குவதற்கு அடுத்த மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். திமுகவினர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக நாங்கள் இந்த பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். சிவகங்கை காவல் நிலைய மரணம் மட்டுமின்றி இதுவரை நடந்த அத்தனை காவல்நிலைய மரணங்களுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலில் கூறியது நான்தான். விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பீர்களா, கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என முதல்வர் ஸ்டாலினிடம் கேளுங்கள்.
திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதுதான் முக்கியம். முதல் பென்ச்சில் இருப்பவர் நன்றாக படிப்பார், கடைசி பென்ச்சில் இருப்பர் நன்றாக படிக்கமாட்டார் என்று அர்த்தம் அல்ல. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல் பலர் கிளப்பி விடுவது. 2026ல் திமுக ஆட்சிக்கு வராது” இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT