Published : 13 Jul 2025 05:31 PM
Last Updated : 13 Jul 2025 05:31 PM
சேலம்: சேலம் வழியாக சென்னை செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் பயணிகள் வசதிக்காக, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையை அடுத்த திருவள்ளுர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், சேலம் - அரக்கோணம் வழித்தடத்தில் சென்னை செல்லக்கூடிய ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து சேலம் வழியாக, கோவை செல்லக்கூடிய சென்னை சென்ட்ரல்- கோவை விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர் சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத் விரைவு ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், மறு மார்க்கத்தில், கோவையில் இருந்து சேலம் வழியாக கோவை- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன. மேலும், கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத், கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி, மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ஆகிய 3 விரைவு ரயில்களும் இன்று சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அத்துடன் இந்த ரயில்களின் சேலம்- சென்னை சென்ட்ரல் இடையிலான இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டன.
இதனால், மேற்கண்ட ரயில்களில் சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்க திட்டமிருந்தவர்கள் பலரும் சேலம் வழியாக பேருந்துகளில் சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே, சேலத்தில் இருந்து சென்னைக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கும் நிலை இருந்தது. இந்நிலையில், சேலத்தில் இருந்து கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை திருவள்ளுவர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சேலம் வழியாக சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. எனவே, ரயில் பயணிகள் பலரும் பேருந்துகளில் சென்னைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டது. வழக்கமாக, ஞாயிறன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னைக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது போல, சென்னை செல்லும் பயணிகள் காலையிலேயே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அதனால், சேலத்தில் இருந்து மதியம் வரை, சென்னைக்கு கூடுதலாக 5 பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், ஓசூர், திருப்பத்தூரில் இருந்து இருந்தும் தலா 3 பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
ரயில் விபத்து செய்தியை முழுமையாக வாசிக்க >> திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT